கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து குத்துவிளக்குகளை திருடிய 3 பேர் கைது
காமாட்சி விளக்குகள் மற்றும் குத்து விளக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் சக்கரத்தாழ்வார் நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் இங்கு வசித்து வருகின்றனர். தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சுகாசினி தனது 2 குழந்தைகளுடன் வெளிநாட்டில் உள்ள கணவரை பார்க்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்தவர்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 5 வெள்ளி காமாட்சி விளக்குகள், ஒரு வெள்ளி குத்து விளக்கு, 2 குத்துவிளக்கு ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. சுகாசினி ஊருக்கு போகும் முன்பு நகைகளை வங்கி லாக்கரில் வைத்ததால் அவை தப்பித்தன. போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் காளிமுத்து, உதவி ஆய்வாளர் சுந்தர் தலைமையில் தலைமை காவலர்கள் செல்லத்துரை, பால் கண்ணன், சுரேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் நாலாட்டின்புதூரை அடுத்துள்ள இடைசெவல் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தினர். போலீஸாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த கனி மகன் பேச்சு முத்து(19), மேலசெவலைச் சேர்ந்த ரவி (45), கீழசெவலை சேர்ந்த ஆறுமுகநயினார் (31) என்பதும், இவர்கள் 3 பேரும்சக்கரத்தாழ்வார் நகரை சேர்ந்த முனியசாமி வீட்டில் விளக்குகளை திருடியவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாலாட்டின்புதூர் விஸ்வநாத நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடன் முயன்றதும், எதுவும் கிடைக்காததால் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி சென்றதும், மேலும் அப்பகுதியில் உள்ள 2 வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காமாட்சி விளக்குகள் மற்றும் குத்து விளக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பேச்சு முத்து மீது திருநெல்வேலி, மேலப்பாளையம், பெருமாள்புரம், தென்காசி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0